MannVaasanai

Every year NCCT supports various projects back home to help rebuild the lives of war affected and disadvantaged people. Projects range from people disabled by the war, kids education, disaster recovery, sustainable projects, women empowerment and many more. Our family connection program is on-going and partnered with Canadian Tamil Radio (CTR). This project benefited hundreds of family who is in need.

 

மண்வாசனை திட்டத்தின் பிரதான பணிகள் பின்வருமாறு: 

1. போரால் காயப்பட்டவர்களுக்கான வலுவிழந்தோருக்கான உதவிகள்:

2009 முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த தாயக உறவுகளுக்கும் யுத்தத்தில் அவயவங்களை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மண்ணின் மைந்தர்கள் உட்பட, வாழ்வாதார உதவிகளை மண்வாசனை திட்டம் செய்து வருகின்றது. முதலில் அடையாளப்படுத்தப்பட்ட 112 உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இவர்களில் பலர் குடும்ப இணைப்புத்திட்டத்தின் ஊடாக பொறுப்பெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு இவர்களுக்கான உதவிகளுக்குரிய வழிவகைகள் செய்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

2. குடும்ப இணைப்பு:

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பொருளாதாரரீதியான மிகப் பெரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகி அசடிப்படை வசதிகளுக்கு கூட அல்லாடும் குடும்பங்களை கை தூக்கி விடும் நோக்கில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் தாயக மக்களுக்கு கை கொடுக்கும் கடமையை உணர்த்தி குறைந்த பட்சம் ஒவ்வொரு புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களும் ஒவ்வொரு குடும்பத்தையேனும் பொறுப்பேற்று தமது உற்ற உறவுகளாக மதித்து கை தூக்கி விடும் பணியை ஆற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே 'குடும்ப இணைப்பு' திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தாயகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் முழுமையாக பொருளாதார ரீதியாக கை தூக்கி விட முடியும் என்பதாலும் புறக்கணிக்கப்படுகின்றோம் அன்பு அக்கறை செலுத்த எமக்கென யாரும் இல்லை என்ற ஏக்கங்கள் உளவியல் தனிமைப்படுத்தல்கள் போன்றவற்றில் இருந்து எம் மக்களை மீட்டு எடுப்பதே இந்த குடும்ப இணைப்பின் முழுமையான நோக்கமாகும். தமது சொந்த சகோதரர்கள் போன்ற உணர்வோடு நேரடியாக பேசி தொடர்பு கொண்டு அக்கறை காட்டுவதால் புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பொறுப்புணர்வும் மன மகிழ்ச்சியும் இத்தகைய திட்டங்களால் அதிகரிக்கின்றது.

3. சுயதொழில் அபிவிருத்திக்கான உதவி:

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எம் தாயக மக்களில் பலர் தமது அன்றாட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது அல்லலுற்று வாழும் நிலையில் தன்னம்பிக்கையோடு தம் காலில் நின்று உழைத்து தம் பொருளாதார நிலையை முன்னேற்ற விரும்பும் வகையில் இருப்பார்கள். அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளிடம் இருந்து மாதாந்த உதவித் தொகையை எதிர்பார்க்காமல் தமக்கென சுயதொழில் வாய்ப்புகளை மட்டும் ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பை எம்மிடம் வேண்டி நிற்பார்கள். கனடிய தமிழர் தேசிய அவையானது அத்தகைய வாய்ப்புகளை புலம் பெயர் தமிழ் மக்கள் உதவியோடு அமைத்து கொடுத்து குடும்பங்களின் நிலையான வருமான வழிகாட்டல்களுக்கு உதவி வருகின்றது.

4. கல்வி உதவி:

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் வறுமை காரணமாக கல்விக்கான புறச் சூழல் இன்றி தாயகத்தில் கல்வியை தொடரும் நிலை இன்றி பாதிக்கப்படுகின்றார்கள். பசியோடு பாடசாலை செல்வதும் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் இல்லாது இருப்பதும் பிற மாணவர்களுடன் இயல்பாக பழக முடியாத சூழலில் தாழ்வு மன நிலை சிக்கல்களுக்கு உள்ளாவதும் என பல தரப்பட்ட சிக்கல்களை எங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாயக தமிழ் சிறார் எதிர்நோக்குகின்றனர். அவர்களை கை கொடுத்து தூக்கி கல்வியை புகட்டும் வகையில் குடும்ப இணைவு திட்டம் மூலமாகவும் தாயக சிறாரை பொறுப்பேற்கும் திட்டமூடாகவும் பொறுப்பேற்றல்களை செய்வதோடு நேரடியாக கல்வி வசதிகளை பாடசாலை மட்டங்களூடாகவும் கனடியத் தமிழர் தேசிய அவை ஆற்றி வருகின்றது.

5. மருத்துவ உதவி:

யுத்தத்தில் காயப்பட்ட உறவுகளுக்கு தேவையான நிவாரண மருந்துகளுக்கு தேவையான செலவை வழக்கும் பணியை செயலாற்றி வருகின்றது. பல தடவைகள் அவசர உதவியாக உயிருக்கு போராடும் நிலையில் சத்திர சிகிச்சைக்குரிய பொருளாதார உதவிகளும் மற்றும் அதற்குரிய வசதி செய்து கொடுத்தலும் அடங்கும்.

6. குடும்ப தலைவனை இழந்த பெண்கள்:

தாயகத்தில் இன்று பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் அதிகம். பெண்கள் தலைமை தாங்கி குடும்பத்தின் பசி போக்க போராடும் சூழலில் வாழ வழி இன்றி தற்கொலை வரை செல்லும் அவலத்தில் எம் பெண்கள் பலர் வாழ்கின்றனர். பெண்களை மையப் படுத்திய இத்தகைய குடும்பங்களுக்கு கனடிய தமிழர் தேசிய அவை வாழ்வாதார வழி வகைகளை செய்து கொடுத்து சுய தொழில் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் பொருளுதவி எனபனவற்றை செய்து வருகின்றது.

7. வெள்ள நிவாரணம்:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவலங்களில் இருந்து மீள முன்பே இயற்கை அனர்த்தங்களால் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் தாயக மக்களுக்கு இயற்கை பாதிப்புக்களில் இருந்து மீண்டு புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கும் பணிகளை காலத்திற்கு காலம் கனடியத் தமிழர் தேசிய அவை செய்து வருகின்றது. அந்த வகையில் அண்மைக் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை கனடிய தமிழர் தேசிய அவை செய்தது.

8. மண் சரிவு:

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமன்றி மலையகத் தமிழர்களின் நலனிலும் தமிழ் தேசிய மாந்தர்களாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் நடைபெற்ற மண்சரிவில் அல்லலுற்ற மலையக தமிழ் மக்களுக்கு உடனடி நிவாரண உதவியாக 24,000 கனடிய டாலர்களினை பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ஊடாக உடனடியாக கனடியத் தமிழ் வானொலியோடு இணைந்து சேகரித்து கனடியத் தமிழர் தேசிய அவையானது அனுப்பி வைத்தது.

9. சிறுவர் இல்லங்கள்:

தாயகத்தில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் சிறவர்களை அரவணைத்து பராமரிக்கும் சிறுவர் இல்லங்களில் வாழும் சிறுவர்களுக்கான உதவிகளை கனடியத் தமிழர் தேசிய அவை ஆற்றி வருகின்றது.

10. யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள்:

கொடிய இனப்படுகொலை யுத்தத்தின் கோர தாக்குதலில் உடைமைகள் உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு உதவுவது போல் யாவையும் இழந்த பரிதவிப்பில் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் வயோதிபர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வரும் அமைப்பிற்கும் கனடியத் தமிழர் தேசிய உதவிகளை ஆற்றி வருகின்றது.

 

கனடிய மண்ணில் கனடியத் தமிழர் தேசிய அவையின் பணிகள்:

தாயகத்திற்கான கனடிய தமிழர் தேசிய அவையின் வாழ்வாதார பணிகளை 'மண்வாசனை' திட்டத்தினூடாக ஆற்றி வரும் கனடிய தமிழர் தேசிய அவை அதன் செயற்பாடுகளை கனடிய உறவுகளுக்கும் விரிவாக்கி வருகின்றது.

1. ஒவ்வொரு ஆண்டும் இருமுறை மே மற்றும் நவெம்பெர் மாத காலப் பகுதியில் கனடிய குருதி வங்கிக்கு குருதி வழங்கும் மனித நேயப் பணியையும் ஆற்றி வருகின்றது.

2. கனடிய மண்ணில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களிற்கான உலர் உணவு சேகரித்து வழங்கும் பணியையும் ஆற்றி வருகின்றது.

3. இருதய நோய் தடுப்புக்கான ஆராய்ச்சியையும் விழிப்புணர்வையும் வளர்க்கும் அமைப்பிற்கான உதவியையும் செய்து வருகின்றது.

கனடியத் தமிழர் தேசிய அவையின் பணிகள் இன்று கனடிய மட்டத்தில் பெரும் வரவேற்பினை பெற்று உள்ளதோடு பல்லின மக்களின் நன் மதிப்பினையும் கனடியத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று உள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையானது அதன் வேலைத்திட்டங்களின் வளர்ச்சியினூடாக அதன் பணிகளை கனடா வாழ் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்கும் மென்மேலும் விரிவாக்க திட்டங்களை வகுத்துள்ளது. அதற்கு அனைத்து கனடியத் தமிழ் உறவுகளினதும் பெரும் ஆதரவையும் தொடர்ச்சியான உதவிகளையும் எதிர்பார்த்து உள்ளது.

கனடியத் தமிழர் தேசிய அவையானது ஒன்றுபட்ட கனடியத் தமிழர்களின் ஒருமித்த ஆதரவுடன் இனி வரும் காலங்களிலும் தொடருந்து பல சேவைகளை ஆற்றி நிற்கும்!